தில்லானா

இது பாரதிய ஜனதாவுக்கு நல்லது

Posted in அரசியல் by thillana on செப்ரெம்பர் 1, 2009

தேர்தலில் தோல்வி, உட்கட்சி பூசல், ஜஸ்வந்த் சிங் போன்ற நீண்ட நாள் உறுப்பினர்கள் விரோதத்துடன் விலகுவது என்று பல்வேறு பிரச்சினைகளில் மூழ்கி இருக்கிறது பா.ஜ.பா. பொதுவாக தோல்வியை தாங்க ஒரு தேசியக் கட்சியாக இருக்கும் பா.ஜ.க வுக்கு பக்குவம் போதாது என்றுதான் சொல்லவேண்டும். 2004-ல் தோற்றபோது இரண்டாண்டுகளுக்கு கட்சியின் எல்லா நிலையிலும் சோர்ந்து போய் புலம்பிக் கொண்டு இருந்தார்கள்.

சென்ற தேர்தலில் ஒரு கட்சியாக தேர்தலை சந்திக்காமல், அத்வானியை மட்டும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது கூட ஒருவகையில் 2004-ல் ஏற்பட்ட தோல்வியில் வந்த புரிதல் தானோ என்று இப்போது தோன்றுகிறது.

பா.ஜ.க.வின் அரசியலை உற்று நோக்கி வருபவர்களுக்கு, வாஜ்பாய் விலகியதிலிருந்தே குழப்பம் நீடிப்பதும், தொடர்ந்து உமா பாரதியில் ஆரம்பித்து அண்மையில் சுதீன்த்ரா குல்கர்னி  போன்று அவ்வப்போது பலராலும் அத்வானிக்கு எதிரான குரல் எழுவதும், எழுப்புபவர்கள் விலக்கப்படுவதுமாக இருந்து வருகிறது. இப்படி எல்லோரும் அத்வானிக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து குற்றம் சாட்டுவதைப்  பார்த்தால் அதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

வெளியில் வந்த ஜஸ்வந்த் சிங் தான் அநியாயமாக வெளியேற்றப் பட்டு விட்டதாக முதலில் அழுதாலும் அதன் பிறகு அவரது நடவடிக்கைகள் அவர் மீதே ஐயத்தை எழுப்புவதாக இருக்கின்றன. முப்பது ஆண்டுகளாக தான் கட்சிக்கு உழைத்ததாக புலம்பிய ஜஸ்வந்த், வெளியேறியதும் பா.ஜ.க ஒரு கு.களுக்ஸ் கிளான் என்கிற இனவெறுப்பு இயக்கத்தைப் போன்றது என்கிறார்.இவ்வளவு மோசமாக தூற்றும் அளவுக்கு அவருக்கு என்ன வெறுப்போ! இவரை சற்றும் தயங்காமல் பா.ஜ.கவிலிருந்து விலக்கியது வெளியில் வராத பல பிரச்சனைகளால்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இவ்வளவு குழப்பங்களுக்கு நடுவிலும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பா.ஜ.க  வின் குழப்பங்களை தீர்க்கும் விதத்தில் முனைந்திருப்பது ஒரு திருப்பு முனை. இதற்கு முன் 1998-ல் ஆட்சியை பிடித்த காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். தலையிடுதலை குறைத்துக் கொண்டு விலகியே இருந்து வந்துள்ளது. இதில் மாற்றம் ஏற்படுவது, ஆர்.எஸ்.எஸ்.சின் தலையீடு பா.ஜ.கவின் குழப்பங்களில் இருந்து விடுதலை அடைய உதவும் என்றே நினைக்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது, இந்துத்துவா கொள்கை முன்னிறுத்தப் படுமா, எந்தெந்த தலைவர்கள் வெளியேறுவார்கள், யார் யார் முன்னிறுத்தப் படுவார்கள் என்று பல சுவாரசியமான நிகழ்வுகள் நடக்கப் போவது உறுதி.

Advertisements

தமிழக அரசு நிறுவனம் விற்ற பதினாறு டன் மூலிகை வயாகரா

Posted in பொதுவானவை by thillana on ஜூன் 30, 2009
Tamcol

Tamcol

தமிழக அரசின் டாம்கோல் நிறுவனம் புதிதாக  மூலிகை வயகரா ஒன்றை வெளியிட்டுள்ளது. லபூப் சகீர் என்பது இதன் பெயர். அல்வாவைப் போன்ற ரொம்ப டேஸ்டா இருக்குதாங்க. (அட, நிஜமாவே நான் இன்னும் சாப்பிட்டு பாக்கலைங்க…).  வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே ஸ்டாக்கும் தீர்ந்து, மூலப் பொருட்களும் தீர்ந்து போயிடுச்சாம். அவ்வளவு டிமாண்டு.

முதலில் ஏப்ரலில் கடைகளில் வந்தபோது அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் வாங்கியவர்கள் ‘அனுபவத்தில்’ அசந்து போய், விஷயம் பரவ ஆரம்பித்தது. பெரிதாக விளம்பரம் இல்லாமலேயே, இரண்டே மாதங்களில் பதினாறு டன் லபூப் சகீர் விற்று தீர்ந்து விட்டதாம். இப்போது டாம்கோல் நிறுவனத்தில் இதற்காகவே ஆட்கள் ராப்பகலாக லபூப் சகீர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

இது ஒரு யுனானி மருந்து. விலை மிகவும் குறைவு – முப்பது ரூபாய் தான் என்று சொல்கிறார்கள். இதில் பாதாம், பிஸ்தா, மற்றும் உலர வைக்கப் பட்ட பழங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிரதாம். இப்போது இதன் ‘மகிமை’ வெளிநாடுகளில் எல்லாம் பரவ ஆரம்பித்து விட்டது.

இது குறித்து சட்டசபையில் கூட சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ் செய்தி:

சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது லபூப் சகீர் குறித்தும் சுவாரஸ்ய விவாதம் நடந்தது. அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் எழுந்து, லபூப் சகீரை எப்படி நம்புவது, அது உண்மையிலேயே பலன் தருமா என்று கேட்டபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், தேவைப்படுபவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளோமே என்று பதிலளிக்க வெடிச் சிரிப்பு கிளம்பியது.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் எழுந்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மருந்தைக் கொடுத்துள்ளோம். உறுப்பினர் ஜெயக்குமாருக்கும் தந்துள்ளோம்.

அவரை இதை பயன்படுத்தி சோதித்துப் பார்த்து விட்டு முடிவைச் சொல்லட்டும். ஒரு வாரத்திற்குப் பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் பலன் இருந்ததா, இல்லையா என்பதை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று கூற சிரிப்பலை அடங்க நேரமானது.

அடப்பாவிகளா… 🙂

அம்மா ஆட்சியிலே டாஸ்மாக்கை திறந்து குடிமகன்களின் கவலைகளை தீர்த்தார். கலைஞர் ஆட்சியில் எல்லோருக்கும் குறைந்த விலையில் வயாகரா கிடைத்திருக்கிறது. இதற்கே கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறைக்கு கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப் போடலாம்.

விரைவில் தமிழ் நாட்டின் ஜனத்தொகை ஏழுகோடியிலிருந்து எழுபது கோடியாவது உறுதி…